வேல் பாய்ந்த: புண்ணில் ஆம் பெரும் புழையில் - புண்ணாகிய புழையிலே; கனல் நுழைந்தால் என - கனன்று கொண்டிருக்கும் தீ நுழைந்தது போல; செவியில் புகுதலோடும் - தனது காதுகளில் புகுந்த போது; உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த - உள்ளத்திலே நிலைத்துள்ள துயரம் (உயிரை) வெளியே தள்ள; ஆர் உயிர் நின்று ஊசல் ஆட - தயரதனது அவ்வரிய உயிர் (உள்ளே போகவும். வெளியே வரவுமாக) ஊசல்போல் ஆட; கண்இலான் பெற்று இழந்தான் என - கண்கள் இல்லாதவன் அதனைப் பெற்றுப் பின்னர் இழந்தான் எனக் கூறும்படி; காலவேலான் கடுந்துயரம் உழந்தான் - பகைவனின் உயிருக்கு இறுதிக்காலம் காட்டும் வேலையுடைய தயரத வேந்தன் கடுமையான துன்பத்தினாலே மிகு வருந்தினான். உள் நிலாவிய துயரமாவது தயரதன் சிரவணனை அம்பால் கொல்ல அவனது பெற்றோர் தந்த சாபத்தால் நிலவிய துன்பமாம். உந்த: தள்ள. கண் இலான்: பிறவிக்குருடன். இடையில் கண் பெற்றும் மீண்டும் இழத்தல் பெருந்துயர் விளைவிக்கும். பிள்ளையில்லாத தயரதன் பெற்று. பிரிவதால் பெருந்துயர் கொண்டான் என்பதற்கு உவமையாயிற்று. 12 |