பக்கம் எண் :

210பால காண்டம்  

328.கறுத்த மா முனி கருத்தை உன்னி. ‘நீ
பொறுத்தி’ என்று அவற் புகன்று. ‘நின் மகற்கு
உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள்
மறுத்தியோ?’ எனா. வசிட்டன் கூறினான்.
 

கறுத்த   மாமுனி   -   சீற்றம்  கொண்டெழுந்த   விசுவாமித்திர
முனிவனது;  கருத்தை  உன்னி  -  உள்ளக்  கருத்தை   நினைத்துத்
தேர்ந்து  (அவனை  நோக்கி); நீ பொறுத்தி என்று  அவன்புகன்று -
நீ பொறத்தருள்வாயாக  என   அவனுக்குச்   சொல்லிவிட்டு    (பிறகு
மன்னனைப் பார்த்து); நின் மகற்கு - உனது மகனாகிய  ராமபிரானுக்கு;
உறுத்தல் ஆகலா உறுதி - அடைவித்தற்கு அரிய நன்மைகளெல்லாம்;
எய்தும் நாள் மறுத்தியோ  -  வந்து  கூடும் நாளை  வேண்டாமென
மறுத்துக்  கூறுவாயோ; எனா வசிட்டன் கூறினான் -  என்று வசிட்ட
முனிவன் கூறலானான்.

கறுத்தல்:   சினத்தல். உன்னி: நினைத்து. பொறுத்தி: பொறுப்பாயாக.
மரியாதை  உணர்த்திற்று.  உறுத்தல்.  அடையச் செய்தல்  (பிறவினை)
உறுதி:   நன்மை.   மறுத்தியோ:  மறுத்துரைப்பாயோ   (அதிகாரத்தை
உணர்த்திற்று). ஆக+அலா: ஆகலா: ஆகமாட்டாது.

சினம்  கொண்டெழுந்த விசுவாமித்திரனைப் ‘பொறுத்தி’ எனக் கூறி
அமைதியுறச்   செய்தபின்.   மன்னனை  நோக்கி.  ‘உன்    மகனுக்கு.
‘உறுத்தலாகலா  உறுதி’  எய்தும்  நாள்  இது. இதை மறுத்தியோ’ என
வசிட்டன் கூறினான் என்பது கருத்து.                          15
 

329.‘பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம் போய்
மொய் கொள் வேலைவாய் முடுகும் ஆறுபோல்.
ஐய! நின் மகற்கு அளவு இல் விஞ்சை வந்து
எய்து காலம் இன்று எதிர்ந்தது’ என்னவே.
   

ஐய - தசரத மன்னனே; பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம் -
பெய்கின்ற    மழையினாலே   பெருகுகின்ற   நீர்ப்பெருகு;   போய்.
மொய்கொள் வேலைவாய்
- சென்று. நிர்ச் செறிவுமிக்க  கடலிடத்தே;
முடுகும் ஆறுபோல் -விரைந்து சேரும் தன்மை போல்; நின்  மகற்கு
- உனது   புத்திரனான   ராமபிரானுக்கு;   அளவில்   விஞ்சை  -
அளத்தற்கரிய  வித்தைகள்  பலவும்;   வந்து  எய்து  காலம் -வந்து
அடையும்   காலம்;   இன்று  எதிர்ந்தது   என்னவே   -  இன்று
கூடியிருக்கிறது என்று வசிட்ட முனிவன் சொல்லவும்.

இது  குளகம்.  அடுத்த  பாட்டுடன்  பொருள்  முடியும். பெருகு
வெள்ளம்.  பெருகிய  வெள்ளம்  (வினைத்தொகை).  போய்: நகர்ந்து
சென்று.  மொய்:  செறிவு  (வலிமை). முடுகுதல்: விரைந்து செல்லுதல்.
ஆறு:  தன்மை.  (ஆறுமாம்).  கடலில்  சென்று  கலக்கும் வெள்ளம்
அளவிடற்கரியது. அதுபோல இராமனை