தீது என்று உள்ளவையாவையும் செய்து - தீமை என்று இருப்பவையாகிய எல்லாச் செயல்களையும் செய்துமுடித்து; எமை. கோது என்று உண்டிலள் - எம்மைப் போன்ற முனிவர்களைச் (சாரமில்லாத) சக்கை என்று உண்ணாது விட்டனள்; இத்தனையே குறை - அவள் செய்த தீய செயல்களில் இவ்வளவவே குறை; யாது என்று எண்ணுவது - இத்தகையவளை என்னவென்று நினைப்பது; இக்கொடியாளையும் - இத்தகைய கொடுஞ்செயல் உடையவளையும்; மணிப்பூணினாய் - மணிகளாலான அணிகலன்களை அணிந்திருக்கும் ராம பிரானே!; மாது என்று எண்ணுவதோ - பெண் என்று நினைத்தல் ஒண்ணுமே? கூடாது என்றபடியாம். தீது: தீய செயல்கள். உள்ளவை: குறிப்பு வினையாலணையும் பெயர். எம் உளப்பாட்டுப் பன்மை. கோது: சாரமற்றது (சக்கை). குற்றம் குறை: குறைவு. அரசகுமாரன் என்பதால் ‘’மணிப்பூணினாய்’’ என்றார். 38 |