கூற்று உறழ் வேலினாய்- எமனுக்கு ஒப்பான வேலேந்திய வீரனே!; சாற்றும் நாள் அற்றது எண்ணி - முன் வினைப்படி ஏற்பட்ட வயது தீர்ந்துவிட்டதை நினைத்து; தருமம் பார்த்து ஏற்றும் விண் என்பது அன்றி - அறப்பயனை நினைத்து. விண்ணுலகம் புகச் செய்தல்லாது; இவளைப் போல் - புதிய எமனாகிய இவ்வரக்கியைப் போல; நாற்றம் கேட்டலும் தின்ன நயப்பதோர் - மணம் தெரிந்தவுடன் உயிர்களைத் தின்ன விரும்புவதாகிய; ஒரு கூற்று உண்டோ - ஒரு எமன் இவ்வுலகத்துண்டோ? சாற்றும்: ஏற்படுத்தும். நாள்: ஆயுட்காலம். நாற்றம்: மணம். கேட்டல்: தெரிந்து கொள்ளல். ‘’நாற்றம் கேட்டலும் தின்ன நயத்தல்’’ எமனுக்கு உரிய குணமன்று. புது வழக்கமுடைய இவள் ‘புதிய கூற்று’ எனப்பட்டாள். உறழ்தல்: பொருவுதல் (நிகராதல்). ‘உண்டோ’ என்பதில் ‘ஓ’ எதிர்மறைப் பொருளில் வந்தது. ‘இல்லை’ என்றபடியாம். சாற்றும் நாள்: நியமித்த நாள் என்றபடி. 42 |