ஈறில் நல் அறம் பார்த்து இசைத்தேன் - அழிவில்லாத நல்லறத்தை நோக்கியே கூறினேன்; இவள் சீறி நின்று இது செப்புகின்றேன் அலேன் - இவளைக் கோபித்து நின்று இதனை நான் சொல்கிறேன்; ஆறி நின்றது அறன் அன்று - எனவே அரச குலத்தவனாகிய நீ இவளது தீச்செயலை அறிந்தும் இவ்வாறு தணிந்து நிற்பது தருமம் அல்ல; அரக்கியைக் கோறி என்று எதிர் அந்தணன் கூறினான் - இந்த அரக்கியைக் கொல்வாயாக என்று எதிர் நின்று விசுவாமித்திரன் கூறினான். ஈறு: முடிவு (அழிவுமாம்). நல்லறம்: உயிர்களுக்கு நன்மை தரும்பொருட்டுச் செய்யும் அறம். இசைத்தல்: சொல்லுதல். சீறி: சினம்கொண்டு. செப்புதல்: சொல்லுதல். ஆறி: தணிந்து. கோறி: கொல்லுதி. கொலையிற் கொடியாரை வேற்தொறுத்தல் பைங்கூழ் களைகட்டதனோடு நேர் என்பது குறளறம். உயிர்களுக்குத் தீங்கு செய்யும் இவளைக் கொல்வதுதான் அறம். ஆறி நின்றது அறம் அன்று என்பது கருத்து. 44 |