கங்கைத் தீம்புனல் நாடன் கருத்தை- கங்கையின் இனிய நீர் பாய்ந்து வளப்படுத்தும் கோசல நாட்டை உடைய இராமபிரானது எண்ணத்தை; அம்மங்கைத் தீ அனையாளும் மனக்கொளா - அந்த நெருப்பைப் போன்ற தாடகையை மனத்தில் கொண்டு; செங்கைச் சூல வெம்தீயினை - தனது சிவந்த கையிலுள்ள சூலமாகிய கொடிய நெருப்பினை; தன் வெம் கண்தீயொடு - தனது கொடிய கண்களிலிருந்து சொரியும் நெருப்புடன்; மேல்செல வீசினான் - ராமன் முதலிய மூவர் மேலும் சென்று படும்படி எறிந்தாள். தீம்புனல்: இனிய நீர். புனல்நாடு: மருதநிலம். தன் கண் தீயுடன் எறியும் தாடகையின் சூல வெந்தீயினை அவிக்கும் ஆற்றலுடைய இராமனது சிறப்புத் தோன்ற ‘’கங்கைத் தீம்புனல் நாடன்’’ என்றார். நாடன்: நாட்டை உடையவன். உயிர்களைக் கொல்வதால் ரத்தக்கறை படிந்த கைகளை உடையவளாதலின் ‘’செங்கை’’ என்றார். கொளா: கொண்டு (செயா என்ற வாய்பாட்டு வினைஎச்சம்). செம்மை: சிவப்புமாம். வெம்மை: வெப்பம். 46 |