மாலும் அக்கணம் வாளியைத் தொட்டதும் - திருமாலின் அவதாரமான ராமபிரான் அக்கணமே அம்பைத் தொடுத்ததும்; கோல வில் கால் குனித்ததும் - அழகிய தனது வில்லின் நுனியை வளைத்ததும் ஆகிய செயல்களை; கண்டிலர் - விண்ணகத்துத் தேவரும் மண்ணில் நின்ற முனிவரும் கண்டாரிலர்; காலனைப் பறித்து அக்கடியாள் விட்ட - யமனை அவன் இடத்திலிருந்து பறித்துச் சூலவடிவாக்கி அக்கொடிய அரக்கி வீச அந்த; சூலம் அற்றன துண்டங்கள் கண்டனர் - சூலம் சிதைந்துபோய்ப் பலதுண்டங்களாக வீழ்ந்ததைப் பார்த்தனர். மால்: அழகு. இங்குத் திருமாலின் அம்சமான ராமனைச் சுட்டியது. வாளி. அம்பு. தொட்டது: தொடுத்தது. கோலம்: அழகு. வில்கால்: வில்லின் முனை. குனித்தல்: வளைத்தல். காலன்: எமன். பறித்தல்: எடுத்தல். கடியாள்: கடுமை உடையவள். அற்றன: வினையாலணையும் பெயர். பகுதி இரட்டித்துக் காலம் காட்டியது. துண்டம்: துண்டிக்கப்பட்ட சிறுபகுதி. தாடகை ஏவிய சூலத்தை ராமன் அழித்தமை கூறப்பட்டது. 48 |