சுரர் தொழுது இறைஞ்சற்கு ஒத்த- தேவர்களெல்லாம் துதித்து வணங்குவதற்கு ஒத்ததாகிய; தூநதி யாவது என்று - தூய நதி யாதாகும் என்று; வரமுனி தன்னை அண்ணல் வினவுற - சிறந்த முனிவனாகிய விசுவாமித்திரனைப் பெருமைமிக்க ராமன் கேட்க; மலருள் வைகும் பிரமன் அன்றளித்த - தாமரை மலரில் தங்கியிருக்கும் பிரமன் முன்பு பெற்ற; வென்றிப் பெருந்தகை குசன் என்று - வெற்றியை உடைய பெருந் தன்மையன் ஆகிய குசன் என்று; ஓதும் அரசர் கோன் - பெரியோர்கள் புகழ்ந்து பேசும் மன்னர் மன்னன்; மனைவி தன்பால் அளித்த மைந்தர் அருமறை அனையார் நால்வர் - தன் மனையாள்பால் பெற்ற பிள்ளைகள் அரியமறைகளைப் போன்ற நால்வராவர். சுரர்: தேவர். ஒத்த: போன்ற. தூ: தூய்மை. வைகல்: தங்கல். வினைவுறு: கேட்க. ஓதல்: புகழ்ந்து சொல்லுதல். மறை: வேதம். அரசர்கோன்: மன்னர் மன்னன். தேவர்களும் வணங்கும் அந்த நதி யாவது என ராமபிரான் விசுவாமித்திர முனிவனைக் கேட்க. அதன் வரலாறு கூறுகிறான் முனிவன். பிரமனுக்கு மகன் குசன் என்னும் வேந்தன். அவன் பெற்ற மைந்தர்கள் நான்மறைக் கொப்பான நால்வர் என்பது கருத்து. 6 |