தனிமகரம் கொடிகொண்டோன் - ஒப்பற்ற மகரமீனைக் கொடியாகக் கொண்டவனான மன்மதனுடைய; குனிசிலைச் சரத்தால் நொந்தேன் - வளைந்த வில்லம்புகளால் நான் மிகவும் வருந்தினேன்; வடித்தடம் கண்ணீர் - (ஆகையால்) மாம்பிஞ்சின் பிளவு போன்ற அகன்ற கண்களை உடைய பெண்களே; என்னை மணத்திர் என்று உரைப்ப - என்னை மணம் செய்து கொள்வீராக என்று வாயுதேவன் கூற; எந்தை அடித்தலத்து உரைப்ப - (நீ சென்று) எங்களது தந்தையை வணங்கி அவரிடம் கேட்க; நீரோடு அளித்திடின் அணைதும் என்ன - (அவர்) எம்மை நீருடன் தாரை வார்த்துக் கொடுத்தால் நாங்கள் உன்னை (மணந்து) அணைவோன் என்று கூற; வெரிநை ஒடித்தனன் - வாயு கோபம் கொண்டு (அவர்களது) முதுகை ஒடித்துவிட்டான்; ஒளிவளை மகளிர் எல்லாம் வீ்ழ்ந்தனர் - ஒளிபொருந்திய வளைகளை அணிந்த அப்பெண்களெல்லாம் வீழ்ந்தனர். மன்மதன் மீனைக் கொடியாக உடையவன் என்பதால் ‘’கொடித்தனி மகரம் கொண்டோன்’’ என்று சிறப்பிக்கப்பட்டான். குனிசிலை: வளைந்த வில் (வினைத் தொகை). சரம்: அம்பு. வடி: மாம்பிஞ்சின் பிளவு. வடிக்கண்: உவமைத் தொகை. ‘’எந்தை அடித்தலத்து (நீர்) உரைப்ப. (அவர்) நீரோடும் அளித்திடின்’’ என்று கூட்டிப் பொருள் கொள்க. வெரிநை: முதுகு. வளை: வளையல். வளை மகளிர்: இரண்டனுருபும் பயனும் உடன் தொக்கத் தொகை. மன்மத பாணத்தால் நொந்தேன்- என்னை மணந்து கொள்ளுங்கள் என. வாயு கேட்க. அப்பெண்கள் - எங்கள் தந்தையிடம் நீகேட்டு? அவர் தாரைவார்த்து மணம் செய்து வைத்தால் நாங்கள் உன்னைச் சேர்ந்து அணைவோம் என்றனர். சினம் கொண்ட வாயுதேவன் அவர்களது முதுகை ஒடித்தான். அம்மகளிர் நிற்க இயலாது கீழே வீழ்ந்தனர் என்பது பொருளாகும். 8 |