சமிரணன் அகன்றதன் பின்- வாயுதேவன் அங்கிருந்து சென்று பின்பு; தையலார் தவழ்ந்து சென்றே - அப்பெண்கள் நிலத்தில் தவழ்ந்தே சென்று; அரசன் மாட்டு மாழ்கி அமிர்து உகு குதலை உரைப்ப - தமது தந்தையான மன்னனிடம். அமுதம் போன்ற மழலை மொழிகளால் நிகழ்ந்த செய்தியைக் கூறி மயங்க; அன்னான் நிமிர்குழல் மடவார்த் தேற்றி - அரசன் வளர்ந்த கூந்தலையுடைய அவ்விளம் பெண்களைத் தேறுதல் செய்து; நிறைதவன் சூளி நல்கும் திமிர் அறு பிரமதத்தற்கு - நிறைந்த தவத்தை உடைய சூளி என்பவனது மகனாகிய மயக்கமற்ற பிரமதத்தன் என்பவனுக்கு; திரு அனாரை அளித்தனன் - திருமகளுக்கு ஒப்பான அப்பெண்களை மணம் செய்து கொடுத்தான். சமிரணன்: காற்றுத்தேவன். தையலார்: அழகுடைய பெண்கள். உகு குதலை: வினைத்தொகை. குதலை: உருத்தெரியாச் சொற்கள். மாழ்கி: மயங்கி. ‘அரசன்மாட்டு’ இதில் மாட்டு என்பது ?ஏழனுருபாம். மடவார்: இளம் பெண்கள் தேற்றி: தேறுதல் செய்து (தேறு: பகுதி). நிறைதவன்: வினைத்தொகை. திமிர்: அகங்காரம் (மயக்கம்) இருள். திமிரம் என்பது கடை குறைந்தது. பிரமதத்தன்: பிரமனால் கொடுக்கப்பட்டவன் என்பது பொருள். ‘’காற்றுக் கடவுளால் இடுப்பொடிக்கப்பட்ட அந்தப் பெண்கள் நூற்றுவரும் தந்தையிடம் சென்று முறையிட - ஆறுதல் கூறித்தேற்றிப்பின் அவர்களைப் பிரமதத்தன் என்பனுக்கு மணம் செய்து தந்தான்’ என்பது பொருள். 9 |