காதலன் சேணின் நீங்க - கணவனான இரிசிகன் செய்த தவப்பலனால் வான்வழி செல்வதற்குத் தன்னை விட்டு நீங்க; கவுசிகை தரித்தல் ஆற்றாள் - என் முன்னவளான கவுசிகை பொறுக்க இயலாதவளாகி; விழு நதி வடிவமாகி - பெரிய ஒரு நதிவடிவம் எடுத்துக்கொண்டு; மீது உறப்படரல் உற்றால் - மேலே போகப் புறப்பட்டாள்; மாதவர்க்கு அரசு நோக்கி- முனிவர்களுக்கு அரசனான இரிசிகன் அதனைப் பார்த்து; மாநிலத்து உறுகண் நீக்க- நிலவுலகத்துத் துன்பத்தைப் போக்க; நதியாய்ப் போதுக என்னா - ஆறாகப் பெருகிச் செல்வாயாக என்று (கூறி); பூமகன் உலகு புக்கான் - பிரமன் உலகைச் சென்றடைந்தான். காதலன்: கணவன். சேண்: உயர்வு இங்கு வானைக் குறிக்கும்). தரிக்கல்: பொறுத்தல். மீது: உயர்வழி. படரல்: நகர்தல். உறுகண்: துன்பம். போதுக: போவாயாக. வியங்கோள்வினைமுற்று. பூமகன்: மலரில் இருப்பவன். புக்கான்: புகுந்தான். கணவன் விண்ணுலகேக. பொறுக்கலாற்றாத கவுசிகை நதியாகி மேலே தொடர. இரிசிகன் உலகத்துத் துன்பம் நீக்க. ஆறாகச் செல்க எனக்கூறி. பிரமனுலகு சென்றான் என்க. என்னா: என்று கூறி. செய்யா என்ற வாய்பாட்டு வினையெச்சம். 13 |