தங்கள் நாயகரின் தெய்வம் தான்பிறிது இலை - தங்களது கணவரைக் காட்டிலும் தெய்வம் வேறுஇல்லை; என்றெண்ணும் மங்கைமார்- என்று கருதும் பெண்ணரசிகளது; சிந்தை போலத் தூயது - மனத்தைப்போல (இச்சோலை) தூய்மையானது; மற்றும் கேளாய் - பின்னும் சொல்லுகிறேன் கேட்பாயாக; எங்கள் நான் மறைக்கும் - எங்களுடைய நான்கு வேதங்களுக்கும்; தேவர் அறிவிற்கும் - தேவர்களின் நுட்பமான அறிவுக்கும்; பிறர்க்கும் எட்டாச் செங்கண்மால் - மற்றவர்களுக்கும் (உள்ளம். உரை) செயல்களால் எட்டமுடியாத திருமால்; இருந்து மேல் நாள் - இங்குத் தங்கி முன் ஒரு காலத்திலே; செய்தவம் செய்ததன்றே - செம்மையான தவத்தைச் செய்த இடமல்லவா? நாயகன்: தலைவன். கணவன். ‘மங்கை’ பருவப் பெயரேயாயினும் பெண்களைப் பொதுவாக இப்பெயரில் குறிப்பிடுவது மரபு. மார்: பலர்பால் விகுதி. சிந்தை: மனம். ‘எங்கள் நான்மறை’ என்றது. அறநெறி நிற்கும் அறிவுடையோர்க்கு உரியது என்பதை உணர்த்தி நின்றது. எட்டா: எட்டாத (ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்). எட்டு: பகுதி. செங்கண்மால் தவம் செய்த சிறப்புடையது இச்சோலை என்றானென்க. அன்றே: அல்லவா என்பது பொருள். அசை எனினும் பொருந்தும். 15 |