பாரின்பால் விசும்பின் பாலும்- மண்ணுலகிலும் விண்ணுலகிலும்; பற்று அறப்படிப்பது - (பிறப்புக்குக் காரணம் ஆன) உலகப் பற்றுக்கள் நீங்க. சொல்லப் பெறுவது; அன்னான் பேர் என்பார் - அத்திருமாலின் பெயர்களே என்று சொல்லிய கோசிகன் மேலும்; அவன் செய் மாயப் பெரும்பிணக்கு - அப்பரமன் செய்யும் மாயமாகிய பெருங்கலகத்தை; ஒருங்கு தேர்வார் ஆர் என்பான் - ஒரு சேரத்தெளிந்து தேர்பவர் யாரென்று சொல்லும் தெளிவுடையவர் எவரும் இலர் என்று கூறிவிட்டு; அமலமூர்த்தி கருதியது - களங்கமற்ற அப்பரமன் நினைத்துள்ளதை; அறிதல் தேற்றாம் - அறிந்து சொல்லும் தெளிவில்லேன்; ஈரைம்பது ஊழிக்காலம் - நூறு யுகம்வரையும்; இருந்தனன் யோகத்து இப்பால் - இவ்விடத்திலே யோகத்தில் இருந்தான் என்றான். பார்: நிலம். விசும்பு: வான். ‘பால்’ இரண்டிடத்தும் ஏழனுருபுகள். பற்று: ஆசை (முதல்நிலைத் தொழிற்பெயர்). பெரும்பிணக்கு: இன்ப துன்பங்களைத் துய்க்கச் செய்யும் பெருங்கலகம் என்பர். என்பாம்: என்று சொல்வோம். மூர்த்தம்: வடிவம். அமலம்: குற்றமற்றது. தேற்றாம்: தேறமாட்டோம். ஊழி: யுகம் (பேரளவைக் காலம்). ஈரைம்பான்: இரண்டு ஐம்பது (எனவே நூறு). இப்பால்: இவ்விடம். இருந்தனன்: இருந்தான். விண்ணும் மண்ணும் பற்றுக்கள் நீங்கச் சொல்லுவது அப்பரமன் பெயர்களே. உலகத்தவரை இன்ப. துன்பங்களை அடையச் செய்ய. அவன் செய்யும் மாயப் பிணக்கை எல்லாம் தேர்ந்து தெளிவார் யார்? அத்தகைய பெருமான் ஒரு நூறு யுகங்கள் இவ்விடம் யோகத்தில் இருந்தான் என்க. 16 |