செய்த பின் - மாவலி அவ்வாறு விண்ணையும் மண்ணையும் வவ்வுதல் செய்த பிறகு; வானமும் செயல் ஆற்றா - தேவர்களும் செய்ய இயலாத; நெய்தவழ் வேள்வியை - நெய்மிகுந்து அவி வழங்கும் வேள்வியை; முற்றிட நின்றான் - செய்து நிறைவேற்ற நிலைத்தவனாகி; ஐயம் இல் சிந்தையர் - ஐயமில்லாத உள்ளம் உடையவராகிய; அந்தணர் தம்பால் - அந்தணர்களிடத்திலே; வையமும் யாவும் - பூமியையும் மற்றெல்லாவற்றையும்; வழங்க வலித்தான் - வழங்கத் துணிந்தான். செயல்: செய்தல் (?தொழிற்பெயர்). ஆற்றா: முடியாத. ‘நெய்தவழ் வேள்வி’ என்று குறிப்பால் ‘ஊன்’ விலக்கியது குறிக்கப்பட்டது. நின்றான்: முற்றெச்சம் (நின்றானாகி). வலித்தான்: துணிவு கொண்டான். தேவர்களும் செய்ய முடியாத வேள்வியைச் செய்து முடிக்க நினைத்து - அந்த வேள்விக் காலத்தே வையமும் யாவும் - ஐயமில் சிந்தையரான அந்தணருக்கு வழங்கத் துணிந்தான் என்பது கருத்து. 18 |