அன்று அவன் வந்தது அறிந்து - அன்று அந்த வாமனன் வந்ததை அறிந்து; உலகு எல்லாம் வென்றவன் - உலகையெல்லாம் வென்றவனான மாவலி; முந்தி விரைந்து எதிர் கொண்டான் - முற்பட விரைந்து சென்று எதிர்கொண்டு அழைத்து வந்தான். பின்பு; நிறைந்தோய் - நிறைந்த தவம் உடைய மேலோனே; நின்தனில் அந்தணர் இல்லை - உன்னைவிடச் சிறந்த அந்தணர் வேறில்லை; என்தனின் உய்ந்தவர் யார் இனி என்றான் - என்னைவிட உய்வு பெற்றவர் இனி இங்கு யார் இருக்கிறார்கள் என்றான். உலகெல்லாம் வென்றவன்: மகாபலிச் சக்கரவர்த்தி. முந்தி: முன். நின்தன் என்தன் இவைகளில் ‘தன்’ இரண்டும் ‘அசைகள்’ ‘’எதிர் கொண்டான்’’ எதிர் கொண்டு. அழைத்து வந்தான் என்பது பொருள். நிறைந்தோய்: தவத்தாலும். தன்மையாலும் நிறைந்தவன் என்பதை உணர்த்தும். வாமனன் வந்ததை அறிந்த மகாபலி எதிர்சென்று அழைத்து வந்து நிறை தவத்தோய் நின்னில் உயர்ந்தாருமில்லை. என்னில் உய்ந்தாருமில்லை எனக் கூறி மகிழ்ந்தான் என்க. 22 |