நன்னெறி முன்னிய நூலவர் - நல்ல நெறியினையே நினைந்துள்ள நூலறிவு வாய்ந்த பெரியோர்கள்; துன்னினர் துன்னலர் என்பது சொல்லார் - நெருங்கியவர். நெருங்காதவர் என்ற வேறுபாடு கருதார்; உன்னிய தானம் - தாம் செய்வதாக நினைத்த தானப் பொருள்; உயர்ந்தவர் முன்வந்து கொள்க - உயர்ந்தோர் முற்பட வந்து கொள்க; என்னின் - என்று சொல்லிவிட்ட பிறகு அதனைப் பெறவந்திருக்கும் பலருள்ளும்; இவன் துணை யாவர் உயர்ந்தார் - இந்த வாமனனுக்கு இணையாகக் கல்வி கேள்விகள் வல்ல உயர்ந்தோர் யாருண்டு? துன்னினர்: நெருங்கியவர் அல்லது உறவினர். துன்னலர்: பகைவர். சொல்லார்: சொல்லாதவராகி (முற்றெச்சம்). நூலவர்: நூலறிவு வாய்ந்த மேலோர். உன்னிய: நினைத்த. தானம்: கொடை. கொள்க: வியங்கோள் வினைமுற்று. துணை: ஒப்பு யாவர்: யார். நன்னெறி கருதிய மேலோர் வேண்டியவர் வேண்டாதவர் என்ற வேறுபாட்டை எண்ணாது. தாம் செய்ய நினைத்த தானத்தை உயர்ந்தோர் கொள்க என்று சொல்லுவராயின். இந்த வாமனனை விட வேறு உயர்ந்தோர் எவருண்டு என்றான் மாவலி என்பது கருத்து. 27 |