தமகைத்து உள போழ்தே- தமது செல்வம் இருக்கும் காலத்திலே; இட்டு இசை கொண்டு - இரப்போர்க்கு ஈந்து புகழ் பெற்று: அறன் எய்த முயன்றோர்- அறத்தை அடைய முயல்பவர்களான அறவாளர்; உள்தெறு வெம்பகை யாவது உலோபம் - மனத்தை அழிக்கும் கொடிய பகையாய் இருப்பது உலோப குணமாகும்; விட்டிடல் என்று - (அதனை) விட்டுவிட வேண்டும் என்று; தாம் கட்டுரையின் விலக்கினர் - (மேலோர்) நீதி நூல்களில் விளக்கிக் கூறியுள்ளனர். கட்டுரை: நீதி நூல் (வரையறுத்த உரைகள் என்பது பொருள்.) கைத்து: பொருள் (செல்வம்). இட்டு: இரப்போர்க்குக் கொடுத்து. இசை: புகழ். முயன்றோர்: வினையாலணையும் பெயர். உள்தெறு: உள்ளத்தை அழித்து. உலோபம்: ஈகையின்மை (உளப்பரும் பிணிப்பு அரு உலோபம் ஒன்றுமே அளப்பருங்குணங்களை அழிக்குமாறு போல் - எனத் தாடகை வதைப்படலத்தும் கூறுவது நினைவு கூரத்தக்கது. விட்டிடல்: விட்டு விடுக. அல்லீற்று வியங்கோள் வினைமுற்று. செல்வம் இருக்கும் போதே ஏற்பவர்களுக்கு ஈந்து புகழ் பெற வாழ வேண்டும். உள்ளத்தை அழிக்கும் கொடிய பகை உலோபம். அதனை விட்டொழிக்க வேண்டும் என்பதே நீதி நூல்களின் துணிவு என்பது கருத்து. 31 |