இம்மொழி யெலாம் முடிய மொழிந்து - இத்தகைய நீதிகளை எல்லாம் முற்றும் எடுத்துச் சொல்லி; மந்திரி கொடியன் என்று உரைத்த சொல் - அமைச்சனும். புரோகிதனுமான சுக்கிரன் வாமனனைக் கொடியன் என்று கூறிய சொற்களை; ஒன்றும் கொண்டிலன் - ஒரு சிறிதும் ஏற்றுக் கொள்ளாதவனாகி; நீ அடி ஒரு மூன்றும் - (வாமனனைப் பார்த்து) நீ என்னைக் கேட்ட அந்த மூன்றடி அளவுள்ள நிலத்தை; அளந்து கொள்க என - உனது காலால் அளந்து கொள்க என்று சொல்ல; நெடியவன் குறிய கை - திருமால் தனது குறுங்கைகளை; நீரில் நீட்டினான் - மாபலி வார்த்த தான நீரில் நீட்டினான். முடிய: முடிவு பெற. ‘மொழி’ என்பது சொல்வாகு பெயராய் நீதிமொழிகளை உணர்த்தி நின்றது. சுக்கிரன் ஆசிரியனும் அமைச்சனுமாம். ‘ஒன்றும்’ இங்குச் சிறிதும் என்று பொருள் தந்து நின்றது. ‘ஒரு’ சிறுமை குறித்த சொல்லாகும். நெடியவன்: திருமால். இங்குக் குறளுருவான வாமன வடிவத்திலேய - பின் எடுக்கப் போகும் பேருருவம் அடங்கியிருக்கிறது என்பதை உணர்த்த ‘’நெடியவன் குறியகை’’ என்றார் என்க. 33 |