ஓரடி உலகு எலாம் உள் அடி அடக்கிற்று- ஊன்றிய காலாகிய ஒரு அடி உலகத்தை எல்லாம் பாதத்துள் அடக்கிவிட்டது; அலகு இலா அவ்வடிக்கு - அளந்து கொள்ள இடமில்லாத அந்த மூன்றாம் அடிக்கு; அன்பன் மெய் அது ஆம் - பக்தனாகிய மகாபலியின் தலையே அளவடியாக ஆயிற்று; சிலைகுலாம் தோளினாய் - வில் பொருந்திய தோளினை உடைய இராமா!; இலைகுலாம் துழாய்முடி- இலைகள் மிகுந்த துளப மாலையை அணிந்துள்ள; ஏகநாயகன்- உலகுக்கு ஒரு தனி முதல்வனான அத்திருமாலாகிய; சாலச் சிறியன்- மிகச் சிறிய வடிவினானா அவ்வாமனன். இது குளகம். அடுத்த பாட்டுடன் பொருள் முடிவு பெறும். உலகு: நிலம். உள்ளடி: அடியுள் என்பது மொழிமாறி நின்றது. அலகு: அளவு. மெய் அது ஆம்: மெய்யதாம். மாவலியின் உடம்பே அளவடியாக ஆனது என்பது கருத்து. ஏக நாயகன்: தனிப்பெருந்தலைவன். ஏகம்: தனிமை. ‘சாலச்சிறியன்’ திருமால் கொண்ட வாமன வடிவைக் குறித்ததாம். இச்சிறிய வடிவமா உலகத்தை யெல்லாம் ஓரடியுள் அடக்கியது என வியந்து கூறியதுமாம். சால: மிக. ஏ: அசை. 36 |