அருவினை அறுக்கும் ஆரிய - உயிர்களைப் பற்றி வருத்தும் அரிய வினைகளை அழித்துக் காக்கும் மேலோனே!; காதலால் கண்டவர் - (இந்தத் தூய்மையான இடத்தை) காதல் கொண்டு காண்பவர்கள்; பிறவி காண்குறார் - பிறவி நோயைக் காணமாட்டார்கள்; ஆதலால். வேதநூல் முறைமையால் - ஆதலாலே. வேதநூல்களில் கூறியமுறைப்படி; வேள்வி முற்றுவேற்கு - வேள்வியை நடத்த நினைத்திருக்கும் எனக்கு; இருக்கற்பாலது - வீற்றிருந்து செய்யத்தக்க இடம்; ஈது அலாது வேறு இல்லை - இவ்விடம் அல்லாது வேறில்லை. ஈது அலாது வேறு இல்லை. இவ்விடம் அல்லாது வேறில்லை. ‘ஆதலால் அருவினை அறுக்கும்’ என்று கொண்டு. திருமால் இருந்த இடமாதலால் தீவினைகளை அழிக்கவல்லதிது எனக் கூறினும் ஆம் ‘அருவினை’ கடத்தற்கரிய வினைகளாம். காதல்: அன்பு (பக்தி). வேதநூல்: வேதமும் நூல்களும் (உம்மைத் தொகை). முற்றுதல்: நிறைவேறச் செய்தல். முற்றுவேன்: வினையாலணையும் பெயர். இருக்கல்: இருத்தல். பால்: தன்மை. ஏ: அசை. வேள்வி: யாகம். வேள்வி செய்ய ஏற்ற இடமிதுவே என முனிவன் கூறினானென்பது கருத்து. |