பக்கம் எண் :

358பால காண்டம்  

விசுவாமித்திரர் முதலிய மூவரும் சனகன் எதிர்கொள்ளச்  சென்று
                                      மாளிகையில்  தங்குதல்
 

562.

ஏகி. மன்னனைக் கண்டு. எதிர் கொண்டு அவன்
ஓகையோடும் இனிது கொண்டு உய்த்திட.
போக பூமியில் பொன்னகர் அன்னது ஓர்
மாக மாடத்து. அனைவரும் வைகினார்.
 

அனைவரும்   - (விசுவாமித்திரன் முதலிய) அம்மூவரும்; ஏகி -
அரசனது  அரண்மனைக்குள்  சென்று;  மன்னனை  - சனகராசனை;
கண்டு   
-   பார்த்து;   அவன்   -  அவ்வரசன்;  ஓகையோடும்
- மகிழ்ச்சியுடன்; எதிர்கொண்டு - எதிரில் வந்து உபசரித்து; இனிது
- இனிமையாக;  கொண்டு -  அழைத்துக்கொண்டு  போய்;  போக
பூமியில்
-    (அதன்பின்)    இன்ப    பூமியான;   பொன்  நகர்
அன்னது  
- அமராவதியில் உள்ள ஆடக மாடம்  போலச்  சிறந்த;
ஓர்  மாக மாடத்து   
-   ஒரு   வான்   அளாவிய  மாளிகையில்;
உய்த்திட  
-சேர்ப்பிக்க; வைகினார் - (அங்கே) தங்கினார்கள்.

பொன்னகர் - பொன்மயமான மாளிகை; ஆடகமாடம் என்பர்.  83

                     சதானந்த முனிவர் வந்து முகமன் உரைத்தல்
 

563.

வைகும் அவ் வழி. மா தவம் யாவும் ஓர்
செய்கை கொண்டு நடந்தென. தீது அறு
மொய் கொள் வீரன் முளரி அம் தாளினால்
மெய் கொள் மங்கை அருள் முனி மேவினான்.*
 

தீது    அறு  -   குற்றம்   இல்லாத;    மொய்கொள்   வீரன்
- வலிமையுள்ள  வீரனான   இராமனது;  முளரி  அம்  தாளினால்
- செந்தாமரை போலும்   திருவடித்  துகளால்;  மெய்கொள்  மங்கை
- பழைய உண்மை வடிவம் அடைந்த  அகலிகை; அருள்-பெற்றருளிய;
முனி
- சதானந்த முனிவன்; வைகும் அவ்வழி -  அவர்கள் தங்கிய
மாளிகையிடத்தில்; மாதவம் யாவும் - பெருந்தவங்கள்  எல்லாம்;  ஓர்
செய்கை கொண்டு
- சீலமாகிய ஓர் உருவம் கொண்டு;  நடந்து  என
- நடந்து வந்தது போல; மேவினான் - வந்தான்.

கௌதம    முனிவனுக்கும்  அகலிகைக்கும்   பிறந்தவன்  சதானந்த
முனிவன்.  அவன்   விசுவாமித்திரன்  முதலியோர்  வருகையை யறிந்து
அவர்கள்  தங்கிய   மாளிகைக்குச்  சென்றான்.  இவன் சனக அரசனது
புரோகிதன். செய்கை - சீலம். ஒழுக்கம்.                        84