அருந்ததி கணவன்- (அப்பொழுது) அருந்ததி கணவனான வசிட்டமுனிவன்; வேந்தற்கு - (இந்தக்) கௌசிக முனிவனுக்கு; அருங் கடன் - செய்வதற்கு அரிய உபசாரக் கடமைகளை; முறையின் ஆற்றி - முறை தவறாமல் செய்து; இருந்து - (நீர் இங்கே) தங்கியிருந்து செல்ல; அருள் தருதி என்ன - கருணை செய்க என்று கேட்டுக்கொள்ள; இருந்த உழி - (கௌசிகன் அவ்வாறே அவ்விடம்) இருந்தபொழுது; இனி நிற்கு - இனி உமக்கு; விருந்து இனிது -விருந்திட்டு இனிதாக; அமைப்பென் என்னா - உபசரிப்பேன் என்று கூறி; சுரபியை விளித்து - (உடனே) காம தேனுவை அழைத்து; நீயே அமிர்தம் சுரந்து அருள் என்ன - அமுதம் (போன்ற உணவு முதலியவற்றை) நீயே இவருக்கு இப்போது சுரந்து அளிப்பாயாக என்று நியமிக்க; அருள் முறை - (அத் தெய்வப் பசு) வசிட்டன் அருளியபடியே; அன்றே - அப்பொழுதே (உணவு முதலிய உபசாரப் பண்டங்களை); சுரந்தது - சுரந்து அளித்தது. அருந்ததி: வசிட்டரின் மனைவி; கற்பு நிலையில் மிக மேம் பட்டவள்; கற்புத் தன்மைக்கு இவளையே உவமையாகக் கொள்வர். சுரபி - காமதேனு - இது பாற்கடலைக் கடைந்த காலத்து அதனினின்று தோன்றியது; வேண்டுகின்றவர் வேண்டு பொருள் அனைத்தையும் உடனே சுரந்து அளிப்பது. 93 |