(அது கேட்டு) பார்த்திபன் - கௌசிக மன்னவன்; பணித்தது புரிவென் - முனிவன் சொன்ன. மொழிப்படியே செய்வேன்; என்னா - என்று; எழுந்து பொங்கி - உற்சாகத்தோடு எழுந்து; சுரபிதன்னை - அந்தக் காமதேனுவை; பிணித்தனன் - பிணித்துக் கொண்டு; பெயர்வுழி - புறப்படும் பொழுது; பிணியை வீட்டி - (அந்தப் பசு) கட்டை அறுத்துக் கொண்டு. வசிட்டனை நோக்கி; மறைகள் யாவும் - வேதங்களை எல்லாம்; கணித்த எம்பெரும - ஆராய்ந்து அளவிட்டு அறிந்த எம்பெருமானே; மணித்தடம் தோளினாற்கு - அழகிய தோள்களையுடைய விசுவாமித்திரனுக்கு; கொடுத்தியோ - என்னை அளித்து விட்டாயோ; என்ன - என்று கேட்க; கலை மறை முனிவன் - தருமநூல் முதலிய கலைகளையும் வேதங்களையும் அறிந்த வசிட்டன்; சொல்வான் - விடை கூறுபவன் ஆனான். வீட்டுதல்: விடுவித்தல் மணி: கருவியாகு பெயர் (இரத்தின அணிகள்) வேதம் வல்ல அந்தணன் அரசனுக்குக் கோதானம் புரிதல் தகாது என்பது புலப்பட நின்றது. 97 |