முயல் கறை இல் - முயலாகிய களங்கம் இல்லாத; மதிக்குடையாய் - சந்திரனைப் போல விளங்கும் வெண்கொற்றக் குடையுடையவனே!; இவர் குலத்தோன்- இம் மைந்தர்களது குலத்திலே; முன்னொருவன்- முன்புதோன்றினான் ஓர் அரசன்; கயல் கடல் சூழ் உலகு எல்லாம்- மீன்கள் வாழும் கடலால் சூழப்பட்டுள்ள நிலவுலகம் முழுவதையும்; கைந் நெல்லிக் கனி - உள்ளங்கையிலுள்ள நெல்லிக் கனிபோல; ஆக்கி - எளிதாக தன் ஆட்சிக்குக் கொண்டு வந்து; இந்திரற்கும் - தேவேந்திரனுக்கும்; இடர் இயற்றி - (பதவி இழத்தலாகிய) துன்பத்தை யுண்டாக்கி; செயற்கு அரிய -(பிறரால்) செய்வதற்கு அருமையான; பெருவேள்வி ஒருநூறும் - ஒப்பற்ற பெரிய நூறு அசுவமேதயாகங்களையும்; இயற்கை நெறிமுறையால் - வேதங்களின் விதி முறைமை வழுவாமல்; செய்து அமைத்தான் - செய்து முடித்தான். இப் பாடலில் குறிக்கப் பெற்றவன் சுதாசன் என்பவர். நகுடன் என்று குறிப்பாரும் உண்டு. சந்திரனிடமுள்ள களங்கத்தை முயலென்றும். மான் என்றும் பூச் சாயை என்றும். மறு என்றும் கூறுவது கவிமரபாகும். 10 |