தூய தவங்கள்- புனிதமான தவங்களை;தொடங்கிய தொல்லோன் - தொடங்கி முடித்த பழையவனான கோசிக முனிவனால்; ஏயவன் - ஏவப்பெற்ற இராமன்; வல்வில் இறுப்பதன் முன்னம் - அந்த வலிய வில்லைக் (கையில் எடுத்து முறிப்பதற்கு முன்பே; அனங்கன் - மன்மதன்; சேயிழை மங்கையர் - செவ்விய அணிகள் பூண்ட பெண்களின்; சிந்தை தொறு எய்யா - மனம் தோறும் (மலர் அம்புகளை) எய்து; ஆயிரம் வில்லை - மிகப்பல விற்களை; இறுத்தான் - முறித்தான். இராமன் சிவதனுசைக் கையில் எடுக்கச் சென்றபோது பார்த்த மங்கையர் பலரும் காமதேவனின் மலர்க் கணைக்கு இலக்காயினர் என்பது. தொடங்கிய பெருந் தவங்களை விடாது செய்து முடித்து முழு வெற்றியும் பெற்ற முதியோன் ஆதலின் ‘தூய தவங்கள் தொடங்கிய தொல்லோன்’ என்றார். 27 |