கொற்றம் - வெற்றியையும்; நாமவேல் - (பகைவர்க்கு) அச்சந் தரும் வேற்படையையும் உடைய; சனகற்கு - சனகமன்னனுக்கு; இன்று - இன்றுதான்; நல்வினை - முற்பிறப்பில் செய்த நல்வினை; பயந்தது - பயனை அளித்தது; என்னா - என்று எண்ணி; விண்ணோர் - (அதனால்) தேவர்கள்; பூமழை சொரிந்தார் - மலர்மழை பொழிந்தார்கள்; மேகம் - வானமானது; பொன்மழை - பொன்மாரி; பொழிந்தது - பொழிந்தது; பாம மா கடல்கள் எல்லாம் - பரந்துள்ள கடல்கள் யாவும்; பல்மணி தூவி - பலவகை மணிகளைச் சிதறி; ஆர்த்த - ஆரவாரித்தன; கோமுனிக் கணங்கள் - சிறந்த முனிவர் கூட்டங்கள்; எல்லாம் ஆசி கூறின - யாவும் வாழ்த்து மொழிகளைக் கூறின. பாமம் - பரப்பு; ஒளி என்ற பொருளும் உண்டு. வில்லொடித்த ஓசை கேட்டு முதலில் துணுக்குற்றாராயினும் பின்னர் இராமன் சிவதனுசை முறித்த ஓசையே என அறிந்து பூமழை பொழிதல் முதலியவற்றைச் செய்தனர் என்பது. 36 |