வேல் கிடந்து அனைய- வேல் தங்கியது போன்ற; நாட்டத்து - கண்களையும்; எல்லியல் மதியம் அன்ன - இரவில் எழும் சந்திரன் போன்ற; முகத்தியர் - முகத்தையும் உடைய மங்கையர்கள்; சொல்லிய பருவம் - (மேகம் வரக்கூடிய) கார்ப் பருவத்தில்; எழிலி தோன்ற - (வானத்தில் மேகங்கள் காணப்பட; தோகையின் - மயில்கள் ஆடுவதுபோல; நல் இயல் - நல்லிலக்கணம் அமைந்த; மகரவீணைத் தேன் உக - மகரயாழின் இசைத் தேன் சிந்தவும்; நகையும் தோடும் - புன்சிரிப்பும் காதணியும்; வில் இட வாள் வீசு - முறையே ஒளியைப் பரப்பிவிடவும்; ஆடினர் - ஆடினார்கள். பற்களின் ஒளி விடாது தோன்றுவதால் ‘வில்இட’ என்றும். காதணிகள் விட்டுவிட்டு ஒளிவிடுவதால் ‘வாள்வீச’ என்றும் இவற்றால் வில்லையும் வாளையும் வீசிக்கொண்டு மகளிர் ஆடினர் என்பது நயம். 38 |