உண் நறவு அருந்தினாரின்- (அறிவைக் கெடுக்கின்ற) கள்ளைக் குடித்தவர்போல; சிவந்து ஒளிர் கருங்கண் - செந்நிறத்துடன் விளங்கும் கரிய கண்களையுடைய; மாதர் - பெண்கள்; புண் உறு புலவி நீங்க - கணவர் மனத்தைப் புண்படச்செய்யும் ஊடல் நீங்குமாறு; கொழுநரைப் புல்லிக் கொண்டார் - தம் கணவரைத் தழுவிக் கொண்டார்கள்; மேன்மேல் விரிகடல் - அலைகள் மேன்மேலும் பரவும் கடலில்; வெண்ணிற மேகம் - வெண் மேகங்கள்; பருகுமா போல் - (நீரைப்) பருகுவது போல; மண்உறை வேந்தன் செல்வம் - நிரம்பப்பெற்ற சனகனுடைய செல்வத்தை; வறியவர் - வறியவர்கள்; முகந்து கொண்டார் - (வேண்டியபடி) வாரிக் கொண்டு சென்றார்கள். வில்லிறுத்த ஓசை செவிப்பட்டதால் சீதையின் திருமணம் நிகழப் போகின்றதென்ற மகிழ்ச்சியால் ஊடல்கொண்ட மகளிரும் அப்புலவி நீங்கித் தம் கணவரைத் தழுவிக் கொண்டனர் என்பது. உட்புறம் முழுவதும் சிவந்து இமைப்பக்கம் கறுத்திருந்த கண்ணென்பார் ‘சிவந்தொளிர் கருங்கண் மாதர்’ என்றார். மகளிர்க்குப் புலவியால் கண் சிவத்தல் இயல்பு. 39 |