விண்தலம்- வானுலகத்தில்; கலந்து இலங்கு - சேர்ந்து விளங்கும்; திங்களோடு - சந்திரனோடும்; மீது சூழ் வண்டு அலம்பு - (தேனைப் பருக) மேலே சுற்றிவரும் வண்டுகள் ஒலிக்கின்ற; அலங்கல் தங்கு - மாலை சூடிய; பங்கியோடும் - மயிர் முடியோடும் (குஞ்சி) கூடிய; வார்சிலை - நீண்ட வில்லைத் தரித்த; கொண்டல் ஒன்று - மேகம் ஒன்று; இரண்டு கண்ணின் - (தன்) இரு கண்களால்; என் ஆவியை - எனது உயிராகிய நீரை; மொண்டு கொண்டு- முகந்து; உண்டது உண்டு - பருகிவிட்டது என்பது உண்மைதான்; அது - அந்த மேகமானது; என் நெஞ்சின் - எனது மனத்தில்; இன்றும் உண்டு- (நீங்காமல்) இப்பொழுதும் உள்ளது; என்றும் உண்டு - (அது மட்டுமா) எப்போதும் அது தங்கியிருக்கும். முகத்தைத் ‘திங்கள்’ எனவும் இராமனை ‘வார்சிலைக் கொண்டல்’ எனவும் உருவகத்தால் சீதை கூறினாள். மேகம் ஆவியால் ஆனது என்ற வழக்கிற்கும் ஏற்பக் ‘கொண்டல் என் ஆவியை மொண்டு உண்டது’ எனக் கூறிய நயம் உணரத்தக்கது. 48 |