இளைக்கலாத - இளைக்காது பருத்து வரும்; கொங்கைகாள் - தனங்களே; எழுந்து விம்மி - (நீங்கள்) மேன்மேல் எழுந்து பருத்து வருதலால்; என் செய்வீர் - என்ன காரியத்தைச் சாதித்து விடுவீர்?; முளைக்கலா - வானில் தோன்றாத; மதிக் கொழுந்து போலும் - என்றும் ஒரு தன்மைத் தாயுள்ள சந்திரனைப் போன்ற; வாள் முகத்தினான் - ஒளியுள்ள முகத்தை யுடையவனும்; வளைக்கலாத வில் - (யாராலும்) வளைக்கமுடியாதபடி அரிதான வில்லை; கை ஆளி வள்ளல் - கையில் ஏந்தியவனுமாகிய அருள்மிக்க அவனுடைய; மார்பினுள்- திருமார்பை; உறத் திளைக்கலாகும் ஆகில் - இறுகத் தழுவக் கூடிய வழி ஏற்படுமாயின்; ஆன செய்தவங்கள் - அதற்கேற்ப செய்யத் தக்க தவங்களை; செய்ம்மினே - செய்யுங்கள். ‘கொங்கை முளைத்தெழுவதன் பயன் அவனது மார்பைத் தழுவிக் கொள்ளுதலேயாகும். அந்த நிலை கிடைப்பதற்கான வழி இருந்தால் அதைச் செய்யுங்கள். அதைவிட்டு நீங்கள் எழுந்து விம்முவதால் பயன் எதுவுமில்லை’ என்று சீதை கூறுகிறாள். 50 |