பக்கம் எண் :

466பால காண்டம்  

கழலினான்     - ஒன்றோடு ஒன்று  மாறி  ஒலிக்கின்ற  வீரக் கழலை
யணிந்த  தசரதன்;  வாசி  என்றனன் - (ஓலை நாயகத்தைப் பார்த்து)
வாசிக்க என்று ஆணையிட்டான்.

கூறிய: இராம  லக்குவர்  அயோத்தியை  விட்டுப்  போன  பின்னர்
நிகழ்ந்த 1.பலை. அதிபலை ஆகிய  இரு  மந்திரங்களைப் பெற்றது. 2.
தெய்வீக  அம்புகளைப்   பெற்றது.   3. தாடகையை வதம் செய்தது. 4.
விசுவாமித்திரன்   செய்த   வேள்வியைக்   காத்தது.  5. அகலிகையின்
சாபம்  தீர்த்தது. 6. சிவதனுசை முறித்தது  ஆகிய  வீரச்  செயல்களைக்
கூறல்.                                                     3
 

735.இலை முகப் படத்து அவன் எழுதிக் காட்டிய
தலை மகன் சிலைத் தொழில் செவியில் சார்தலும்.
நிலை முக வலையங்கள் நிமிர்ந்து நீங்கிட.
மலை என வளர்ந்தன. வயிரத் தோள்களே.
 

இலைமுகப்    படத்து- பனையோலையின் முகப்பாகிய படத்தில்;
அவன்  எழுதிக்  காட்டிய
- அச் சனக மன்னன் எழுதிக் காண்பித்த;
தலைமகன்  சிலைத் தொழில்
- (தன்) மூத்த மைந்தனாகிய இராமனது
வில்லாற்றலானது;  செவியில்  சார்தலும் - (தன்) காதில் பட்டவுடனே;
வயிரத்  தோள்கள்  
-  (தசரதனுடைய)  வயிரம்  போன்ற உறுதியான
தோள்கள்;   நிலைமுக   வலையங்கள்  -  தம்மிடம்  நிலை  பெற்ற
தோள்வளைகள்;  நிமிர்ந்து நீங்கிட - வாய்விட்டுக் கழன்றுபோகும்படி;
மலை என வளர்ந்தன
- மலைபோலப் பூரித்தன.

தன்     மூத்த மைந்தனான இராமனது  வீரச்  செயலை  வேறொரு
மன்னன்  புகழ்ந்து எழுதியதைக்  கேட்டுத்  தசரதன்  மகிழ்ச்சியடைந்து
தோள் பூரித்தான் என்பது.                                    4
   

736.வெற்றிவேல் மன்னவன். ‘தக்கன் வேள்வியில்.
கற்றை வார் சடை முடிக் கணிச்சி வானவன்.
முற்ற ஏழ் உலகையும் வென்ற மூரி வில்
இற்ற பேர் ஒலிகொல் அன்று இடித்தது. ஈங்கு?’ என்றான்.
 

வெற்றிவேல்    மன்னவன் - வெற்றி பொருந்திய வேலை ஏந்திய
தசரதன்;  கற்றை  வார்  சடைமுடி  -  தொகுதியான  நீண்ட  சடை
முடியையும்;   கணிச்சி   வானவன்   -  மழுப்படையையும்  உடைய
தேவனாகிய   சிவ   பெருமான்;  தக்கன்  வேள்வியில்  -  தக்கனது
யாகத்தை   அழித்த  போது;  ஏழ்  உலகையும் - ஏழு உலகத்தையும்;
முற்றவும்  வென்ற  
-  முற்றும்  வெற்றிகண்ட;  மூரிவில்  -  வலிய
வில்லானது; இற்ற  -  முறிந்ததனால்  உண்டான;  பேரொலிகொல் -
பெரிய  ஓசையோ;  அன்று  -  அன்றைய தினம்; ஈங்கு இடித்தது -
இங்கே இடித்தது; என்றான் - என்று வியந்து கூறினான்.