மகளிர் ஊர்வன- மகளிர் ஏறிச் செலுத்தக்கூடிய; மணி மன் புரவிகள் - கிண்கிணி மாலை பூண்ட குதிரைகள்; அன்னம் உந்திய - அன்னப் பறவைகளைச் சுமக்கின்ற; திரை ஆறு போன்றன - அலைகளையுடைய ஆறுகளை ஒத்தன; பொன் அணி புணர்முலை - பொன் அணிகளைப் பூண்ட நெருங்கிய தனங்களையும்; புரிமென் கூந்தலார் - பின்னப்பட்ட மெல்லிய கூந்தலையுமுடைய மகளிர்; மின் என - மின்னலைப் போலத் தோன்ற; மடப்பிடி- (அவர்கள் ஏறியிருந்த) இளம்பெண் யானைகள்; மேகம் போன்ற - மேகத்தை ஒத்தன. கிங்கிணியின் ஓசை அன்னத்தின் குரலையும். குதிரைகள் அலைகளையும். மகளிர் அன்னப் பறவையையும் ஒத்துள்ளமை காணலாம். - தற்குறிப்பேற்ற அணி. மகளிர் பெண்யானைகள்மேல் ஊர்தல் மரபு: களிறு ஆணாதலால் கற்பிற்கு இழுக்காதல் நோக்கியும் களிறு மதம் கொள்ளின் அதனை அடக்கியாளும் வன்மை இவர்களுக்கு இல்லையாதலானும் எனலாம். 14 |