பாகினும் தித்தியாநின்ற- வெல்லப் பாகைக் காட்டிலும் தித்திக்கும்; சொல் சிவந்த வாய்ச்சியர்- சொல்லையும். சிவந்த வாயையும் உடைய பெண்களின்; உத்தராசங்கம் இட்டு - மேலாடையிட்டு; ஒளிக்கும்- மறைத்து வைத்துள்ள; கூற்றம் - இயமனைப் போன்ற வருத்தும் தனங்கள்; முத்தினால் - (தாம் அணிந்துள்ள) முத்து மாலைகளால்; முழு நிலவு எறிக்கும்- நிறை மதியின் ஒளியை வீசும்; மொய்ம் மணி பத்தியால் - நெருங்கிய இரத்தின மணிகளின் வரிசையால்; இளவெயில் பரப்பும் - இளவெயிலைப் பரவ விடும். தனங்களைக் கூற்றம் என்று உருவகப்படுத்தினார். தனங்களில் அணிந்த முத்துமணி வடங்களால் நிலவு. வெயில் என்ற இரண்டும் ஒரே காலத்தில் தோன்றும் என்ற நயம் கருதத் தக்கது. உத்தராசங்கம் - மேலாடை (வடசொல்). கூற்றம் உயிர்களை உடலிலிருந்து பிரிக்க நோய் முதலியவற்றில் மறைந்துநின்று பிரித்தல் போல இக்கூற்றமான கொங்கை மேலாடையில் மறைந்து நின்று வருத்துகின்றது என்பது. 16 |