பரியின் பந்தி- குதிரைக் கூட்டங்கள்; சூர் உடை நிலை என - தெய்வத்தின் தன்மை போலவும்; தோய்ந்தும் தோய்கிலா - வெளியில் அன்பர்போலக் காட்டியும் (அகத்தில்) அன்பு கொள்ளாத; வார் உடை வனமுலை - கச்சு அணிந்த அழகிய தனங்களையுடைய; மகளிர் சிந்தைபோல் - (விலை) மகளிர் மனம் போலவும்; தாரொடும் சதியொடும் - கழுத்தில் அணிந்துள்ள கிண்கிணி மாலையின் ஒலியோடும்; தாவுமாயினும் - அடிவைத்துத் தாவிப் பாயுமாயினும்; பாரிடை மிதிக்கில - பூமியில் பொருந்தாமல் சென்றன. விலைமகளிரின் சிந்தையானது பெற்ற பொருளளவிற்கு ஏற்பத் தாவிக் கொண்டே இருப்பதுபோலக் குதிரைகளும் ஒரு நிலையில் நில்லாமல் தாவின என்பது. தார் (ஒலி) - ஆகுபெயர். சதி - ஒத்த அடி வைப்பினால் உண்டாகும் ஓசை - ஆகுபெயர். குதிரைகள் பூமியின்மேல் செல்லும்போது அவற்றின் பாதங்கள் பூமியிலே படாமல் இருப்பதற்கு தேவதைகளின் பாதம் பூமியில் பதியாமல் இருப்பதையும். வேசியரின் மனம் ஒருவர்மேல் அன்பு கொள்ளாமலே செல்வதையும் உவமையாக்கினார். 20 ஊடிய மகளிரின் போக்கு |