காரணம் இன்றியேயும் - காரணம் எதுவும் இல்லாமல்; கனல் எழ விழிக்கும் - நெருப்புப் பொறி பறக்க விழிக்கும்; கண்ணார் - கண்ணகளையுடையவரும்; வீரம் வேத்திரத்தார் - வீரம் தோன்றும் பிரப்பங்கோலை ஏந்தியவர்களும்; தாழ்ந்து விரிந்த - பாதம்வரை தாழ்ந்து பரவிய; கஞ்சுகத்து மெய்யார் - சட்டையைத் தரித்த உடம்புடைய கஞ்சுக மாக்கள்; தார் அணி புரவிமேலார் - கிண்கிணி மாலை யணிந்த குதிரைகளின் மேல் இருப்பவர்களும்; தலத்து உளார் - தரையில் நடப்பவர்களும்; கதித்த சொல்லார் - பிறரை வருத்தும் கடுஞ்சொற்களை யுடையவருமாகி; ஆர் அணங்கு அனைய - தெய்வப் பெண்களையொத்த; மாதர் - மகளிரின்; அடி - பாதங்களை; முறை - முறைப்படி; காத்துப் போனார் - பாதுகாத்துச் சென்றார்கள். கனல் விழிக்கும் கண் முதலியவற்றையுடைய கஞ்சுக மாக்கள் குதிரைமேல் இவர்ந்தும். தரையில் நடந்தும் அரசன் தேவியருக்குக் காவலாகச் சென்றனர். 67 |