சரம் பயில் சாபம் என்ன - அம்பு பொருந்திய வில்லைப் போன்ற; புருவங்கள் தம்மின் ஆடா - புருவங்கள் தம்மிலே ஆடாமல் இருக்க; நரமபினோடு இனிது பாடி - யாழ் நரம்போடு பொருந்த இனிமையாகப் பாடி; மயிலோடு நாடகம் ஆடி - மயில்களோடு (ஒப்ப) நடனம் ஆடி; அரம்பையர் வெறுத்து - தெய்வ மகளிர் (கணவர் மீது) ஊடலை உட்கொண்டு; நீத்த அவிர்மணிக் கோவை - கழற்றியெறிந்த ஒளிரும் நவமணி மாலைகளையும்; ஆரம் - முத்தாரங்களையும்; மரம் பயில் கடுவன் - மரங்களில் பழகுகின்ற ஆண்குரங்குகள்; பூண - (தமக்கு) அணிவிக்க; மந்தி கண்டு உவக்கும் - பெண் குரங்குகள் (அந்த அணிகளின்) அழகைக் கண்டு மகிழ்ச்சியடையும். தெய்வப் பெண்கள் ஊடலால் கழற்றியெறிந்த இரத்தினமாலை முதலியவற்றை ஆண்குரங்குகள் பெண்குரங்குகளுக்கு பூட்டின; அந்த அழகைக் கண்ட அப் பெண் குரங்குகள் மகிழ்ந்தன என்பது. 13 |