படர் சுனை- பரவியுள்ள நீர்ச் சுனையை; படிகத்தின் தலம் என்று - படிகக் கற்கள் கிடக்கும் இடமென்று; எண்ணி - மாறாகக் கருதி; முடுகிப் புக்க - விரைந்து சென்ற; சுடிகைப் பூங்கமலம் - சுட்டியணிந்த அழகிய தாமரையையும்; சுடர் மதி அன்ன - ஒளிவிடும் சந்திரனையும் ஒத்த; முகத்தினார்தம் வடகத்தோடு - முகத்தையுடைய மகளிரின் மேலாடையோடு; உடுத்த தூசை - (அரையில் கட்டிய) சேலையையும்; மாசு இல் நீர் நனைப்ப - கலங்காது தெளிந்த தண்ணீர் நனைக்க; நோக்கி - (அதை) கண்டு; கடகக் கை எறிந்து - கடகம் அணிந்த கைகளைக் கொட்டி; கருங் கழல் வீரர் - பெரிய கழலணிந்த வீரர்கள்; நக்கார் - சிரித்தார்கள். மகளிர் சுனையுள்ள இடத்தைப் பளிங்குத் தலமென்று கருதிச் சென்றதால். தமது ஆடை நனைந்தன. அதைப் பார்த்த வீரர்கள் கை கொட்டிச் சிரித்தனர். என்பது - மயக்கவணியும் பொதுவணியும் கலந்த கலவையணியாம். 18 |