கோள் உண்ட திங்கள் முகத்தாள் ஒரு கொம்பு - மேகத்தால் சூழப்பெற்ற நிலாப் போன்ற முகமுடைய கொடி போன்றாள் தன் கணவனான; ஓர் மன்னன் தோள் உண்ட மாலை - அரசன் தோளில் அணிந்துள்ள மாலையை; ஒரு தோகையைச் சூட்ட நோக்கி - மயில் அனையாள் ஆகிய மற்றொரு உரிமை மகளுக்கு அணிவதைப் பார்த்து தாள் உண்ட கச்சின் தகையுண்ட முலைக்கண் - முடிச்சிட்ட கச்சின் இயல்பையழித்த முலைக் கண்களின் மேல்; வாள் உண்ட கண் ஆலி - வாளைவென்ற கண்களிலிருந்து (வருகின்ற) கண்ணீர்த்துளிகள்; மழையுண்டென வார நின்றாள் - மழை பொழிவது போலப் பொழிய நின்றாள். தன் தலைவன் இத்தகு அன்போடு சூட்டவில்லையே எனும் ஏக்கம் அவள் கண்ணீருக்குக் காரணம் ஆயிற்று. நாருண்ட மாலையை விடவும் அவன் தோளுண்ட மாலைக்கே ஏங்கினாள் என்று கணவன் அன்புக்கு ஏங்கும் மகளிர் மனநிலை சுட்டினார். கண்களும் மழை பெய்வது உண்டு எனக் காட்டுவாள் போல் அழுதாள் என்பார். “கண்ணின் மழையுண்டென வார நின்றாள்” என்றார். “ஓர் மன்னன்” என வரற் பாலது. செய்யுள் ஆதலின் “ஒர் மன்னன்” என வந்தது. இனிவருவனற்றிற்கும் இவ்வாறே கொள்க. 14 கணவன் மறைவிடம் நிற்க மனைவி மறுகுதல் |