தேன் நகும் நறவமாலை - வண்டுகள் (உண்டு) மகிழும் தேனையுடைய மலர்மாலை (யணிந்த); செறிகுழல் தெய்வம் அன்னாள் - அடர்ந்த கூந்தலையுடைய தேவதையை ஒத்தாள் ஒருத்தி; தான் உடைக் கோலமேனி - தான்கொண்ட அழகிய உடல்; தடத்திடைத் தோன்ற நோக்கி - தடாகத்தில் (நிழலாகத்) தோன்றுவதைப் பார்த்து; இந்நல்நுதல் நான்நக நகுகின்றாள் - இந்த நல்ல நெற்றியுடையாள் நான் சிரிக்கும் போதெல்லாம் சிரிக்கின்றாள்; தோழி ஆம் என்று - (ஆகவே இவள்) என்னுடையதோழி யாவாள் என்று கூறி; விலையின் ஊனம் இல் ஆரம் - விலை மதிப்புடைய குற்றமற்ற (முத்து) மாலைகளை (நிழல் தோழிக்கு); உளம் குளிர்ந்து உதவுவாரும் - மனம் உவந்து கொடுத்து நிற்கின்றவர்களும். இன்பத்தில் இன்பமும். துன்பத்தில் துன்பமும் கூறுதல் உயிர்த்தோழியர் இயல்பு ஆதலின். “நான்நக நகுகின்றாள் இந்நன்னுதல் தோழியாம்” என்றாள். தேன் ஒருவகை வண்டு. இது நல்ல மணத்தே செல்லும் எனவும் ஊற்றறிவு முதலிய ஐயறிவும் இதற்கு உண்டு எனவும் நச்சினார்க்கினியர் கூறுவார் (சீவக. 892 உரை). குற்றமற்ற விலைமதிப்புடைய முத்துமாலையை உளம் குளிர்ந்து ஒரு பெண் ஈதல் அரியசெயல் ஆதலின் “தெய்வம் அன்னாள்” என்றார். 8 |