செய்ய வாய் வெளுப்ப - சிவந்த வாய்கள் வெண்மை நிறம் அடையுமாறும்; கண் சிவப்புற - (கருங்) கண்கள் சிவப்பு நிறம் பெறவும்; மெய் அராகம் அழிய - உடலிற் பூசியிருந்த சந்தனம் அழிந்து போகுமாறும்; துகில் நெக - (அரை) ஆடை தளர்ந்து போகுமாறும்; தொய்யில் மாமுலை மங்கையர் - (சந்தனம். குங்குமம் முதலியவற்றால்) கோலங்கள் எழுதிய பெரிய தனங்களையுடைய பெண்டிர்; தோய்தலால் - தோய்வதற்கு இடமாய் இருத்தலால்; பொய்கை - அந்த நீர்நிலை; காதற் கொழுநரும் போன்றது - இவ்வகையில் செய்யவல்ல காதல் (மிக்க) கணவனையும் ஒத்ததாய் ஆயிற்று. கருங்கண் சிவப்ப. கனிவாய் விளர்ப்பக் கண்ணார் அளி பின்வருங் கண்மலைமலர் சூட்டவற்றோ? (திருக்கோவை 70) என்பர் வாதவூரர். “வாயின் சிவப்பை விழிவாங்க. மலர்க் கண்வெளுப்பை வாய்வாங்கத் தோயும் கலவி” (கலிங் கடை. 41) என்பார் சயங்கொண்டாரும். தோய்தல் - மூழ்குதல். புணர்தல் எனும் இருபொருளும் தருவது. காதலரைக் கூடுகையில் மகளிர்வாய் வெளுத்தலும். விழி சிவத்தலும். மணப்பூச்சுகள் அழிதலும். ஆடை குலைதலும் இயல்பாதலின். இச்செய்கைகள் பொய்கையிலும் நிகழ்தலின். பொய்கையும் இவை செய்த காதல் கொழுநன் போன்றாயிற்று. சந்தனத்தை. வடமொழியில் அங்கராகம் என்பராதலின். அதனைத் தமிழாக்கி. மெய்யராகம் என்றார். தொய்யில் - மார்பில் மணப்பொருள்களால் வரையும் வரிக்கோலம். சிலேடையணி. 19 |