பக்கம் எண் :

  நீர்விளையாட்டுப் படலம்605

எண்ண   இயல்வில்லை  என  வியந்தார்.  சந்தனங் கரைந்தது மகளிர்
மார்பில் அதனால். எரிய வேண்டியதோ அம்மகளிர்  மார்பு.  எரிவதோ
மைந்தர் மார்பு! என்ன விந்தை இது! என வியக்க வைக்கிறார்.      27
 

956.

தாழ நின்ற ததை மலர்க் கையினால்.
ஆழி மன் ஒருவன் உரைத்தான்; அது
வீழியின் கனிவாய் ஒரு மெல்லியல்.
தோழி கண்ணில். கடைக்கணிற் சொல்லினாள்.
 

ஆழி  மன்  ஒருவன் - ஆணைச் சக்கரம் செலுத்தவல்ல மன்னன்
ஒருவன்;  தாழ நின்ற  ததைமலர்க்  கையினால் - மிக நீண்டு நின்ற
இதழ்கள்   செறிந்த  தாமரை   மலர்   போன்ற  (தன்)  கைகளினால்;
உரைத்தான்  
-  (நாம்  எங்கே; எப்போது மீண்டும் சந்திப்பது  என்று)
சைகையால்  கேட்டான்; வீழியின் கனிவாய் ஒரு மெல்லியல் - வீழிப்
பழம்   போன்ற  வாயினையுடைய   மெல்லியலாள்  ஒருத்தி;  தோழி
கண்ணில் கடைக் கண்ணில் சொல்லினாள்
-தோழியின் கண்மூலமாகக்
கடைக் கண் சாடையினால் (அவனுக்குப்) பதில் அறிவித்தாள்.

ஆடவனாகிய    அவனைப் போலச் சைகையால் நேரடியாகப் பதில்
இறுத்தல். உயர்  குடிப்பெண்மைக்குச்  சிறப்பு  அன்று ஆதலின். தோழி
கண்ணுக்கு  இவள்  கண்ணால்  சொல்ல.   அவள்  அவனுக்குத்   தன்
கடைக்   கண்ணால்  தெரிவித்தாள்  என்க.  காதல்   உலகில்.   நயன
மொழியின்  பெரும்பங்கு  தெரிவித்தவாறு  “சிறு  நோக்கம்  காமத்தின்
செம்பாகம்    அன்று    பெரிது”   திருக்.   1092)    “பெண்ணினால்
பெண்மையுடைத்தென்ப    கண்ணினால்  காமநோய்  சொல்லி   இரவு”
(திருக். 1280) எனும் அருமைக்  குறள்கள்  ஒப்பிடத்தக்கன.  “காதன்மை
கண்ணுளே   அடக்கிக்   கண்   எனும்.   தூதினால்  துணி  பொருள்
உணர்த்தித்  தான்.  தமர்க்கு.  ஏதின்மை  படக்  கரந்திட்ட  வாட்கண்
நோக்கு.  ஓதநீர்  அமுதமும்  உலகும் விற்குமே”  (சீவக. 1485)  எனும்
திருத்தக்க தேவர் வாக்கும் சிந்திக்கற்பாலது.                     28
 

957.

தள்ளி ஓடி அலை தடுமாறலால்.
தெள்ளு நீரின் மூழ்கு செந்தாமரை.
புள்ளி மான் அனையார் முகம் போல்கிலாது.
உள்ளம் நாணி. ஒளிப்பன போன்றவே.

 

தள்ளி ஓடி அலை தடுமாறலால் - (நீராடலால் தம் நிலையிலிருந்து)
தள்ளப்படுதலால்.  பரந்து  சென்று  அலைகள் தடுமாறுவதால்; தெள்ளு
நீரின்   
-   தெளிந்த  (அந்த  நீர்  நிலையின்)  தண்ணீரில்;  மூழ்கு
செந்தாமரை
- மூழ்கிப் போகின்ற செந்தாமரை மலர்கள்; புள்ளி மான்
அனையார்  
-  புள்ளி  மானைப்  போன்ற அங்குள்ள  மகளிருடைய;
முகம்  போல்  கிலாது  
- முகங்களைப் போன்றிருக்க இயலாமையால்;
உள்ளம்  நாணி
-  மனத்திற்குள் வெட்கமுற்று; ஒளிப்பன போன்ற -
(நீருக்குள்) மறைவன போன்றன.