ஆக்கிய காதலாள் ஒருத்தி - (கணவனின் அழகு பண்பு முதலியவற்றால்) உண்டாக்கப்பெற்ற காதலையுடையாள் ஒருத்தி; போக்கின தூதினோடு உணர்வும் போக்கினாள் - தன் கணவனை அழைத்து வர அனுப்பிய தூதினுடனேயே தன் மன உணர்வையும் (சேர்த்து) அனுப்பி விட்டாள்; அந்தியில் தாக்கிய தெய்வம் உண்டு என்னும் தன்மைகள் - (ஆதலால்) மாலைப் பொழுதில். இவளை ஒரு தெய்வம் தாக்கியிருக்கக் கூடும் என்று (கண்டார்) கூறத்தக்க தன்மையளாய்; நோக்கினள்; நின்றனள் நுவல்வது ஓர்கிலள் - (விழித்த கண் இமையாமல்) கணவன் வரஉள்ள திசையினை நோக்கியவாறே நிற்கின்றாள்; (அருகிருப்பார்) கூறுவனவற்றை யெல்லாம் அவள் உணரவே இல்லை. காதல் தாக்கணங்கெனத் தாக்கும் சக்தியது என்றபடி. காதல். “பிறப்பு. குடிமை. ஆண்மை. ஆண்டு அழகு. அறிவு முதலியவற்றின் (தொல். மெய்ப்பாட். 25) வாயிலாய் விதிகூட்ட ஆவது ஆதலின் “ஆக்கிய காதலாள் ஒருத்தி” என்றார். தெய்வம் தீண்டப் பெற்றவர்கள் உலகியற் செயலற்று நிற்பர் ஆதலின். “தாக்கிய தெய்வம் உண்டு என்னும் தன்மையள்” ஆனாள். காதலாள் ஒருத்தி. தூதினோடு உணர்வு போக்கினாள்; தாக்கிய தெய்வம் உண்டு என்னும் தன்மையாள்; நோக்கினள்; நின்றனள்; நுவல்வது ஓர்கிலள் எனக் கூட்டுக. 51 |