(ஒருத்தி) எழுத அரும் கொங்கை மேல்- ஒரு மங்கை ஓவியத்தால் எழுதுவதற்கரிய பொலிவுடைய (தன்) தனங்களின் மீது; அனங்கன் எய்த அம்பு உழுத வெம்புண்களில் - மன்மதன் தொடுத்துவிட்ட அம்புகள் துளைத்ததனால் விளைந்த கொடும் புண்களின்மேல்; வளைக்கை ஒற்றினாள் - வளையல்கள் அணிந்த (தன்) கரங்களை (வைத்து வைத்து) ஒற்றினாள்; அழுதனள்; சிரித்தனள்- துயர் மிகுதியால் அழுவாள்; தன் நிலையை எண்ணி (துன்பச் சிரிப்பு) சிரிப்பாள்;அற்றம் சொல்லி ஒருத்தியைத்தூது வேண்டித் தொழுதாள் - தான் படும் துன்பங்களையெல்லாம் தோழி ஒருத்திக்குச் சொல்லி. தூது செல்ல வேண்டிக் (கைகூப்பித்) தொழுவாள். அநங்கன் செய்த வெம்புண்களை ஆற்றத் தன் கரங்களால் இயலாதாகையால். ஆற்றுங் கரமுடையானை அழைத்து வரற்குத் தூதேகுமாறு தொழுது தவித்தாள் என்க. “உடம்பும் உயிரும் வாடியக்காலும் என்னுற்றன கொல் இவையெனின் அல்லது கிழவோற் சேறல் கிழத்திக்கு இல்லை” (தொல். பொருளியல். 9) என்பது இம்மண்ணின் மரபாதலின் அவனை அழைத்து வருமாறு தோழியைத் தொழுதாள். 53 |