உழுவை முந்து அரி அனான் - முந்தி வந்து புலி ஒன்றால் வரவேற்கப்படுகிற சிங்கத்தை ஒத்தவனும்; எவரினும் உயரினான்- (அங்கிருந்த) அனைவரிலும் உயர்ந்தவனுமான தசரதச் சக்கரவர்த்தி; தழுவி நின்று. அவன் இருங்கிளையையும் தமரையும் - சனக மன்னனை அணைத்து நின்று. சனகனின் பெருஞ்சுற்றத்தாரையும். நண்பர்களையும்; வழுவில் சிந்தனையினான் வரிசையின் அளவாய்- குற்றமற்ற (தூய) எண்ணத்தினனாய் முறைப்படி நலம் வினவி; ‘முந்துற எழுக (எனா - ‘முன்னாற் செல்லுங்கள்’ எனக் கூறி. (பின்னால் சனகனைப் பின்பற்றி); இனிது வந்து எய்தினான்- இனிதே வந்து மிதிலை நகர் அடைந்தான். அறிமுகமானவரிடம். முறைப்படி முகமன் உரை கூறும் முறை பற்றி. “வரிசையின் அளவளாய்” என்றார். இதுவும் தொன்மை ஒழுங்காசாரம் சுட்டியது. பரம்பொருளை மகனாகப் பெற்ற தந்தை யாதலால் “எவரினும் உயர்ந்தான்” எனக் கூறத் தட்டில்லை யாதல் உணர்க. வரவேற்கப் பட்டார் பின் ஆகி. வரவேற்றார் முன் ஆகி வழி கூட்டியவாறு செல்லுதல் மரபாதலின் “முந்துற எழுக” என்றான் தசரதன். 18 இராமனின் வருகை |