நெடுந்தாதை முன்பேர் இருவர் தம் புடை- (பெருமைக்குணம்) மிக்க தம் தந்தையான தசரதனது எதிரிற் சென்று பெருமைக்குரிய (இராம. இலக்குவர்) இருவரின் பக்கத்திலே; தானை ஏர் சனகன் ஏவலில் வரும் படையின் - படைக்குரிய அழகினையுடைய சனகனின் ஏவலினால் உடன் வரும். சேனையில்; யானையோ. பிடிகளோ. இரதமோ. இவுளியோ - (ஆண்) யானைகளோ? பெண் யானைகளோ? தேர்களோ? குதிரைகளோ? (இவற்றுள் எவையோ மிகுந்தவை?); ஆனபேர் உறைஇலா நிறைவை யார் அறிகுவார்?-பெரிய எண்களை எண்ணுவதற்கான உறையென்னும் குறிப்பிலககம் இட்டும் எண்ணமுடியாத (அந்த யானை முதலியவற்றின்) நிறைவினை அறிந்து கூறவல்லவர் யாவருளர்? உறை - ஓர் இலக்கக் குறிப்பு. பொருள்களை எண்ணுங் காலத்து ஒவ்வொரு பெரிய எண்ணுக்கும் கழற்சிக்காய். குன்றிமணிகளை ஒவ்வொரு விழுக்காடு வைக்கும் சிறு குறியீடு. “உறைபோடக் காணாது” என்னும் வழக்கம் காண்க. “ஒழிந்த பேர் உயிர்கள் எல்லாம் அரக்கருக்கு உறையும் போதா” (கம்ப. 4868) ; “அம்பண அளவை உறை குறித்தாங்கு” (பதிற். 11:5) ; “இவ்வரக்கர்........உறையிடவும் போதார்” (கம்ப. 5344) எனவருவனவும் காண்க. 21 பணிந்த இராமலக்குவரைத் தயரதன் தழுவுதல் |