(இராமன்) அனிகம் வந்து அடிதொழக் கடிது சென்று - (இராமபிரான் தன் தந்தையின்) சேனைகள் வந்து தன் திருவடிகளை வணங்க. விரைந்து சென்று;அரசர் கோன் இனிய பைங்கழல் பணிந்து எழுதலும் - தசரதச் சக்கரவர்த்தியின் (காண்பதற்கு) இனிய பசுங்கழல்கள் அணிந்த பாதங்களை வீழ்ந்து வணங்கி எழுந்தவுடன்; தழுவினான் - (சக்கரவர்த்தி தனது பெறற்கரிய மைந்தன் இராமனை) அணைத்துக் கொண்டான்; மனுஎனும் தகையன் மார்பிடை - ஆதிமனுச் சக்கரவர்த்தி என்று சொல்லத்தக்க குணங்களையுடைய தசரதனின் மார்பிலே; மலைத்தனிநெடுஞ்சிலை இறத்தவழ் தடங்கிரிகள் மறைந்தன - மேருமலை யாகிய ஒப்பற்ற சிவதனுசு ஒடியும்படி செய்த (இராமனுடைய) தோள்களாகிய மலைகள் மறைந்து போயின. “மார்பிடைத் தோள்கள் மறைந்தன” என்றதனால். தயரதனின் மார்பகலம் வியந்தவாறு. “மலையை முறித்த மலை” என்று இராமனின் தோள்களை ஒரு நயம்படக் கூறினார். தயரதன் நாடாண்ட நேர்த்தியை. “மனு எனுந்தகையன்” என ஒரு தொடரால் உணர்த்திவிட்ட திறம் உணர்க. “தனு அன்றித்துணை இல்லான்; தருமத்தின் கவசத்தான்; மனுவென்ற நீதியான்” (கம்ப. 650) என முன்பும் புகழ்ந்த திறம் ஓர்க. 23 |