களிப்பன. மதர்ப்ப. நீண்டு கதுப்பினை அளப்ப- (இயல்பாகிய) களிப்புத் தோன்றுவனவும். செழிப்புத் தோன்றுவனவும் நீளமாய்ச் சென்று கூந்தலை அளப்பனவும்; கள்ளம் ஒளிப்பன வெளிப்பட்டு ஓடப் பார்ப்பன - உள்ளத்து உள்ளதை மறைக்கும் கள்ளம் உள்ளனவும். இமைகளுக்கு வெளியே வந்து ஓடப் பார்ப்பன போன்றனவும்; சிவப்பு உள் ஊற வெளுப்பன கறுப்ப ஆன வேற்கணாள் - உள்ளுள்ள சிவந்த (நரம்பில்) இரேகைகள் வெளித் தெரிவனவும் (சில பகுதிகள்) வெளுத்தும் (சில பகுதிகள்) கறுத்தும் உள்ளதுமாகிய வேல் போன்ற விழிகளையுடையாள் ஒருத்தி; உள்ளம் குளிர்ப்பொடு காண வந்தாள் - உள்ளங் குளிர்ந்த மகிழ்வோடு (இராமனைக் காண வந்தாள்); வெதுப்பொடு கோயில் புக்காள் - கண்டவுடன் வந்த (காதல்) வெப்பத்தைச் (சுமந்தவாறு) தன் மாளிகைக்குள் சென்று சேர்ந்தாள். இத்துணைச் சிறப்புக்களையும் உடைய கண்கள் குளிர்ச்சியோடு வந்தவளை வெப்பத்தோடு போக உதவின என்று வியந்தவாறு. தன் பார்வையிலிருந்தும் இராமன் விலகியவுடன் எழுந்த காமதாபம் நெருப்பாகச் சுட்டதால் “வெதுப்பொடும் கோயில் புக்காள்” என்றார். முதல் மூன்றடிகளிலும் கண்ணின் சிறப்பை உரைத்துள்ள திறம் ஓர்க. மதர்ப்பு: செழிப்பினால் உண்டான செருக்கு. 16 |