பக்கம் எண் :

690பால காண்டம்  

1089.கனக நூபுரம் கை வளையோடு உக.
மனம் நெகும்படி வாடி. ஒர் வாணுதல்.
‘அனகன் இந் நகர் எய்தியது. ஆதியில்.
சனகன் செய்த தவப் பயனால்’ என்றாள்.
 

ஒர்வாள்    நுதல்- ஒளி பொருந்திய நெற்றியினாள் ஒரு மங்கை;
கனக நூபுரம் கைவளையோடு  உக  
-  பொன்னாலான கால்சிலம்பு.
கைவளையோடு  சேர்ந்து  (உடல் மெலிவால்)  கழன்று விழவும்; மனம்
நெகும்படி  வாடி  
-  நெஞ்சு  நெகிழ்ந்து  உருகுமாறு வாட்டமுறவும்;
அனகன்  இந்நகர்  எய்தியது 
- குற்றமற்றவனான இராமபிரான் (நம்)
மிதிலை  நகருக்கு  வந்தடைந்தது; ஆதியில்  சனகன்  செய்த தவப்
பயனால் என்றாள்
- (நம் மன்னன்) சனகன்  முன்பு  செய்த தவத்தின்
விளைவினால் என்று கூறினாள்.

உயர்ந்தோர்  வருகை தவப்பயனால் தான் கூடும் என்பதனை. “நகர்
நீ வலஞ்செய்து வணங்க எளிவந்த இது முந்து என் குலம்  செய்தவம்”
(கம்ப.  320)  எனத்  தசரதன்  கூற்றாய்  முன்பும்  குறித்தார். சனகன்
தவஞ்செய்தான்.   சீதைக்கு   இராமன்   கிடைத்தான்;  என்  தந்தை
இவ்வாறு தவம் செய்யவில்லையே என ஏங்கினாள்.  மன வாட்டத்தால்
உடல்  வாடும்  என்பதனை  “மனம்  நெகும்படி  வாடி  கனக நூபுரம்
கைவளையோடு   உக”   என்றார்.   பிரிவில்  வருந்துவாரின்  உடல்
மெலிவால்   கைவளை   முதலிய  அணிகள்   நெகிழ்ந்து  வீழ்வதாக
உரைத்தல் கவி மரபு. “துறைவன் துறந்தமை தூற்றா கொல்;  முன் கை.
இறை இறவா நின்றவளை” (திருக். 1157) என்பதும் காண்க.         27
 

1090.நனி வருந்தி. நலம் குடிபோயிட.
பனி வரும் கண் ஒர் பாசிழை அல்குலாள்.
‘முனிவரும் குல மன்னரும் மொய்ப்புற அற.
தனி வரும் கொல் கனவின்தலை?’ என்றாள்.
 

பனிவரும்    ஒர் பாசிழை அல்குலாள்- கண்ணீர் நீர்த்துளிகள்
ததும்பிய  கண்ணையும்  பச்சைக்  கற்கள் பதித்த  (மேகலை  முதலிய)
அணிகலனையும் அணிந்த இடைப் பக்கத்தையும்  உடையாள்  ஒருத்தி;
நலம் குடிபோயிட  நனி  வருந்தி
- (இவ்வளவு நாளும் தன் உடலில்
குடியிருந்த)  தன்  அழகு  இடம்  பெயர்ந்து   நீங்கிடுமாறு  (இராமன்
மேற்கொண்ட    வேட்கையில்)    மிகவும்   துயருற்று;   முனிவரும்
குலமன்னரும் மொய்ப்பு அற
- (இவ்விராமன்) முனிவர்களும் மன்னர்
குலத்தினரும்  (இப்போது)  மொய்த்துக்  கிடப்பது போல்  அல்லாமல்;
கனவின்  தலை தனிவரும் கொல் என்றாள்
- என் கனவில் தனியாய்
வருவானோ?’ என்று (ஏக்கத்தோடு) கூறினாள்.

தனித்து     வந்தால் தன்வேட்கை தீரத் தழுவி மகிழ்வேன் என்பது
குறிப்பு.  கூடி இருப்பார் முன் தழுவல் நாணத்தால்  இயலாது.  நனவில்
தழுவுதல்    தவமின்மையால்     இயலாது.     ஆதலால்.   “கனவில்
தனிவருங்கொல்” என்றாள்.                                  28