பக்கம் எண் :

  உலாவியற் படலம்693

துணைப்  பெண்கள்  மொய்ப்பதாகக்  கூறுவதெல்லாம்  இராமபிரானின்
ஏற்றம் உயர்த்தவே என்பதனை உய்த்துணர்க.                   32
 

1095.வையம் பற்றிய மங்கையர் எண்ணிலர்.
ஐயன் பொற்புக்கு அளவு இலைஆதலால்.
எய்யும் பொன் சிலை மாரனும். என் செய்வான்?
கை அம்பு அற்று. உடைவாளினும் கை வைத்தான்.
 

வையம்    பற்றிய மங்கையர் எண்ணிலர்- அந்நகரத்தை வாழ்
இடமாகக்  கொண்ட பெண்டிர் தொகைக்கும்  அளவு என்பது  இல்லை;
ஐயன்  பொற்புக்கு  அளவிலை  இராம  பிரானது  அழகுக்கும் அளவு
என்பது  இல்லை;  ஆதலால்.  எய்யும்  பொன்  சிலை   மாரனும்
என் செய்வான்? -
(அந்த  மங்கையர்  உள்ளத்தில்  எய்ய வேண்டிய
மலர்க் கணைகளின் தேவைக்கும் ஓர் அளவில்லை) ஆதலினால்  (மலர்)
அம்பெய்கின்ற   அழகிய   வில்லினையுடைய     மன்மதனும்   யாது
செய்வான்?;  கை  அம்பு  அற்று  -  (தன்)  கையில்  உள்ள (மலர்)
அம்புகள்  எல்லாம் தீர்ந்து போய்; உடைவாளினும் கை வைத்தான்-
(அம்மாதர் மேல் பாய்ச்சும் பொருட்டு) உடைவாளின் மேலும் கையை
வைத்தான்.

காமன்    “கையம்பு அற்று உடைவாளினும் கை வைக்க” நேர்ந்தது
எனக்  குறித்தவாற்றால் மன்மதன் தோல்வியும் மகளிர்  ஆற்றாமையும்
இராமனின்     உடல்    அழகும்    குண     அழகும்    ஒருங்கே
வெளிப்படுத்தியவாறு  மன்மதனுக்கும் அங்குள்ள  மகளிர்க்கும்  நடந்த
போரின்   தீவிர   நிலை  தெரிவித்தவாறுமாம்.   தொலைவிலிருந்தால்
அம்பாலும்    அருகிலிருந்தால்     வாளாலும்    தாக்குவது   போர்
முறையாதலின்.  மன்மதன்  மகளிரை  மிக  நெருங்கி  வந்துவிட்டான்
என்பதை   “உடை   வாளினும்   கை    வைத்தான்”   என்பதனால்
உணர்த்தினார்.                                            33
 

1096.நான வார் குழல் நாரியரோடு அலால்.
வேனில் வேளொடு. மேல் உறைவார்களோடு.
ஆன பூசல் அறிந்திலம்; அம்பு போய்
வான நாடியர் மார்பினும் தைத்தவே.
 

நான  வார்  குழல்  நாரியரோடு  அலால்  -  புனுகு  (முதலிய
மணப்பொருள்கள்)    நிறைந்த   நீண்ட     கூந்தலுடைய   மிதிலைப்
பெண்களோடு  மன்மதனுக்கு நடந்த போரினை அல்லாமல்;   வேனில்
வேளொடு  மேல் உறைவார்களோடு ஆன பூசல்   அறிந்திலம்  
-
இளவேனில்  பருவத்துக்குரிய மன்மதனுக்கும்  வானக   மங்கையர்க்கும்
இடையே  என்ன  போர்  என்று  நாம்  அறியக் கூடவில்லை;  அம்பு
போய் வான நாடியர்  மார்பினும்  தைத்த  
- (ஏன் எனில்)  மன்மத
அம்புகள்  போய்  (இராமன்  உலாவைப்  பார்க்க   வந்திருந்து) வான
நாட்டுப் பெண்களின் மார்பகங்களிலும் போய்த் தைத்தன.