மாதர் இன்னணம் எய்திட- (பல்வேறு பருவத்து) மகளிரும் இத்தகைய நிலையினை அடைந்திட; வள்ளல் போய் - இராம பிரான் சென்று; கோதில் சிந்தை வசிட்டனும் - குற்றமற்ற மனத்தினனாகிய வசிட்ட மாமுனிவனும்; கோசிக வேத பாரனும் - கோசிக முனி என்கின்ற வேதங்களின் கரைகளைக் கண்ட விசுவாமித்திரனும்; மேவிய மண்டபம் - வந்து வீற்றிருக்கின்ற மண்டபத்தை; ஏதி மன்னர் குழாத் தொடும் எய்தினான் - படைக்கலம் ஏந்திய அரசர் குழாத்துடனே அடைந்தான். பாரம்: அக்கரை. வேதபாரன்: வேதத்தின் கரையாகிய பொருளினை நன்கு உணர்ந்த விசுவாமித்திரன் என்க. “தவஞ் செய்வோர்கள் வெருவரச் சென்றடை காம வெகுளியெலாம் (கம்ப. 324) வென்றவன் வசிட்ட பகவான் ஆதலின். “கோதில் சிந்தை வசிட்டன்” என்றார். காம. வெகுளிகளை வெல்லப் போராடி அரச குலத்துப் பிறந்து வேதபாரகனாய். முயற்சியால். “பிரம்ம இருடி” ஆனவன் ஆதலால் விசுவாமித்திரனை “வேதபாரகன்” என்றார். மாதர்கள் இந்நிலையில் வருந்திட இராமன் தன் நிலையில் சற்றும் மாறாமல் பொருட்படுத்தாமல் போனான் என்பதனைத் தொனிப்பொருளாய் உணர்த்த. “மாதர் இந்நிலை எய்திட வள்ளல் போய்” என்றார். 42 |